Friday, November 25, 2016

அதிரையில் பரபரப்பு: பொதுமக்கள் சாலை மறியல்!

அதிரையில் பொதுமக்கள் சாலை மறியல்

அதிராம்பட்டினத்தில் கடந்த  சில நாள்களாக அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் பணம் எடுக்க முடியாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, வங்கி மற்றும் ஏடிஎம்களில் கூட்டம் அலைமோதி வருகின்றன. பணத் தட்டுப்பாடு நீடிப்பதால், பெரும்பாலான வங்கிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் அதிரை கனரா வங்கியில் மக்களுக்கு பணம் வழங்காமல் அலைக்கழிப்பதால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அதிரை ஈசிஆர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் மக்கள் தொடர்ந்து போராட்டத்தை கைவிடாமல் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து வங்கி நிர்வாகம் சிலரை அழைத்து இன்று 300 நபர்களுக்கு மட்டும் 2000 ரூபாய்களை வழங்குவதாகவும், மற்றவர்கள் திங்கள் அன்று பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியது. ஆனால் 500க்கும் மேற்பட்ட மக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்து கிடந்ததால், வங்கியின் இந்த முடிவையும் ஏற்க மறுத்துள்ளனர். மத்திய அரசின் அடாவடி அறிவிப்பால், தாங்கள் சம்பாதித்த பணத்தை எடுப்பதற்கே மக்கள் அவலப்படும் நிலை இங்கு ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்த, அதிராம்பட்டினம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, வங்கி அதிகாரிகள் 150 பேருக்கு ரூ 4000 வீதம் இன்று வெள்ளிக்கிழமை பணம் வழங்கினர். மீதமுள்ள 350 பேருக்கு டோக்கன் வழங்கி வரும் திங்கள்கிழமை பணம் பெற்றுச்செல்ல அறிவுறுத்தினர். இதன்பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

அதிரையில் பொதுமக்கள் சாலை மறியல்
அதிரையில் பொதுமக்கள் சாலை மறியல்



No comments:

Post a Comment