Monday, February 20, 2017

சேமிப்பு கணக்கிலிருந்து வாரத்திற்கு அதிகபட்சம் ரூ.50,000 எடுக்கலாம்: ஆர்.பி.ஐ


ரிசர்வ் வங்கி ஏற்கெனவே அறிவித்தபடி, சேமிப்புக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு (வாரம்) திங்கட்கிழமை முதல் ரூ.50 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டது.
கடந்த நவம்பர் 8-ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்தார். இவற்றுக்கு பதில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
எனினும், போதுமான அளவு ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வராததால் நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். ஏடிஎம்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பல ஏடிஎம்களில் பணம் நிரப்பப்படவில்லை.
இதனால், ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான தினசரி உச்சவரம்பை ரூ.2 ஆயிரமாக ரிசர்வ் வங்கி குறைத்தது. அதேநேரம், ஏடிஎம் அல்லது வங்கிக் கிளைகள் மூலம் ஒரு சேமிப்புக் கணக்கிலிருந்து வாரத்துக்கு ரூ.24 ஆயிரத்துக்கு மேல் எடுக்க முடியாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
பின்னர் புதிய ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்துக்கு வரத் தொடங்கியது. இதையடுத்து, ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான தினசரி உச்சவரம்பு ரூ.2,500, ரூ.4,500, ரூ.10 ஆயிரம் என படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. எனினும், வாரத்துக்கான கட்டுப்பாடு தொடர்ந்து ரூ.24 ஆயிரமாகவே நீடித்தது.
இந்நிலையில், பிப்ரவரி 20-ம் தேதி முதல் வாரத்துக்கான உச்ச வரம்பு ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்றும் மார்ச் 13-ம் தேதி முதல் இந்தக் கட்டப்பாடு முற்றிலுமாக அகற்றப்படும் என்றும் ரிசர்வ் வங்கி இந்த மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தது. இதன்படி, திங்கட்கிழமை முதல் சேமிப்புக் கணக்கிலிருந்து வாரம் ரூ.50 ஆயிரம் எடுக்கலாம் என்ற அறிவிப்பு அமலுக்கு வந்தது.

No comments:

Post a Comment