Thursday, March 9, 2017

நெடுவாசலுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்க ஐகோர்ட் உத்தரவு

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சென்னையில் மாணவர்கள் நடத்தவி ருக்கும் உண்ணாநிலை போராட்டத்திற்கு அனுமதி வழங்க காவல்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு கடந்த மாதம் 15 ஆம் தேதி மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனை எதிர்த்து கடந்த 20 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுக்க போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மார்ச் 2 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம் நடத்த அனுமதி கோரி மாணவர்கள் சார்பில் சென்னை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையரிடம் கடந்த மாதம் 24 ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல் துறை தரப்பு அந்த மனுவை நிராகரித்தது. இதை எதிர்த்து மாணவர்கள் சார்பில் சென்னையை சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அந்த மனுவில் "ஹைட்ரோ திட்டத்தை எதிர்த்து மாணவர்கள் நடத்தும்  போராட்டத்திற்கு மட்டும் காவல்துறை அனுமதியளிக்கவில்லை என்றும் வேறோரு நாளில் போராட்டம் நடத்த அனுமதியளிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு  இன்று  நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு விசாயணைக்கு வந்தது , "மாணவர்கள் காவல்துறையிடம்  புதிதாக மனு வழங்கவும், அதற்கு காவல்துறை ஆணையர் அனுமதி யளிக்கவும் உத்தரவிட்டு" வழக்கை முடித்து வைத்தார்.

No comments:

Post a Comment