Saturday, December 20, 2014

வேட்டி கட்டிய வெள்ளைக்காரரோ?-தொடரும் அதிரை நினைவுகள்

அதிரையின் பசுமை நினைவுகள் (தொடர்ச்சி...) டாக்டர். ஏ.பீ.முகம்மது அலி, Ph.D.,I.P.S (R) 



அதிரையில் அடியெடுத்து வைத்தல்: நாட்கள் உருண்டோடின. ஜுலை மாதம் குருப் 1 பரீட்சை முடிவு வெளிவந்தன. அதில் நான் தேர்வு பெறவில்லை. நான் ஊரில் இருக்கும் போதெல்லாம் எங்களுர் பள்ளியில் மாலை நேரத்தில் கால்பந்து விளையாடுவேன். அப்படி நான் ஒரு நாள் விளையாடிக் கொண்டு இருக்கும்போது என் நண்பனும் அதிரை கல்லூரி முன்னாள் மாணவனுமான காசிம், பேராசிரியர் அசன் அனுப்பியிருந்த தந்தியினை எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் காட்டி அதில் என்னை உடனே அதிரைக்கு அழைத்து வரச் சொன்ன தகவரையும் சொன்னார்.நாங்கள் இருவரும் இரவோடு இரவாக ரயிலில் அதிரை புறப்பட்டு மறுநாள் காலை போய் சேர்ந்தோம். பேராசிரியர் அசன், காதர் முகைதீன் கல்லூரி தாளாளர் சேக் ஜலாலுதீன் வீட்டையொட்டிய குடியிருப்பு ஒன்றில் பேராசிரியர் அபுபக்கர், சிப்ளி, ஜின்னா ஆகியோருடன் தங்கி இருந்தார். அடுத்த குடியிருப்பில் ஆங்கில பேராசிரியர் இக்பால் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.அசன் அவர்கள் வரலாற்றுத் துறையில் ஒரு லெக்சரர் போஸ்ட் காலியாக இருக்கு நீங்கள் தாளாளரை போய் பாருங்கள் என்றார்.நான் கொண்டு வந்த மாற்றுத் துணிகளை அணிந்து கொண்டு அவரைப் போய் பரந்த பங்களா போன்ற வீட்டில் அவருடைய அலுவலகத்தில் போய் பார்த்தேன்.பார்ப்பதற்கு ஒரு ஆங்கிலேயர் கைலியும் சட்டையும் தொப்பி அணிந்தால் எப்படியிருப்பார் அது போன்று மிகவும் கம்பீரமாக இருந்தார். நான் படித்த கல்லூரிகள் விபரத்தினைக் கேட்டு விட்டு என்னை மேலும் கீழும் பார்த்து தராசில் எடைபோடுவது போல போட்டுவிட்டு போய் பிரின்ஸ்ப்பால் செல்வக்கணபதியினைப் போய் பாருங்கள் என்று மட்டும் சொன்னார்.


அவரைப்போய் கல்லூரியில் பார்த்ததும் இன்று உங்களை வேளையில் சேர்க்கும்படி தாளாளர் சொல்லிவிட்டார் உடனே சேருங்கள் என்றார். நான் மாற்று டிரஸ் எதுவும் எடுத்து வரவில்லை. என்றேன்.அதற்கு அவர் வெள்ளி லீவில் போய் எடுத்து வாருங்கள் என்றார். பேராசிரியர் அசன் இரண்டு நாட்களுக்கு தனது உடுக்கையினை தந்து பேருதவி செய்தார்.இந்தக் காலத்தில் எந்த தனியார் கல்லூரியிலும் ஆசிரியர் வேலைக்கு வெயிட்டான சிபாரிசுடம் ரூபாய் 10 லட்சம் கேட்பதாக அறிந்து வேதனைப் படுகிறேன். ஏனென்றால் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் பணம் கொடுத்து வேலையில் சேர முன்வர மாட்டார்கள். தாளாளருக்கு உதவியாக பாருக்-உமர் என்பவர்கள் இருந்தனர்.



அதிரையில் உலா: வங்கக் கடல் ஓரத்தில் தென்னை மரமும், பச்சை பசேல் என்ற நெல் விவசாயமும், பருத்தி விரித்து போட்டது போன்ற உப்பளமும் ஒருங்கே அமையப்பெற்ற ஊர் அதிரையாகும். அதிரையில் சில அதிசய பழக்கஙகள் கண்டேன்.திருமணம் முடிந்ததும் மணமகன் பெண் வீட்டோடு மாப்பிள்ளையாகி விடுகிறார். காலை-மாலை தாயார் வீட்டில் விருந்து இரவு பெண்வீட்டில் சாப்பாடு-தங்கள். காலையில் கையில் கைலி-துண்டு-பேஸ்ட்டுடன் கூடிய பிரஸ்-குளிக்க சோப் ஆகியவற்றுடன் கிளம்பி நேராக சாலி காக்கா புரோட்டக் கடையிலோ அல்லது மற்ற கடையிலோ நாஸ்தா பின்பு குளியல். இதுதான் பெரும்பாலானோர் கடைப்பிடிப்பதினைக் கண்டேன்.நாங்கள் கல்லூரிக்கு போகுமுன் சாலிகாக்கா கடையில்தான் டிபன் சாப்பிடுவோம். ஆகவேதான் மேற்கூறிய பழக்கம் எனக்கு வித்தியாசமாக தெரிந்தது. மாலையில் ராஜாமடம் தேவர் மெஸ்ஸில் சாப்பாடு. அது குடிசையில் அமைந்திருக்கும். 

அந்த தேவர் இளைஞர் எந்த வகை மீன் சாப்பாடு, அதாவது டேங்க் ப்பிஸ் அல்லது சீ ப்பிஸ் என்பதிற்குப் பதிலாக டேங்க் பிஸ் அல்லது சீ பிஸ் வேண்டுமா என்று கேட்பார். அதே ஒரு விளையாட்பாக அமையும்.நோன்பு நேரத்தில் எல்லா ஹோட்டல் முன்பும் சாக்கு தொங்கவிடப் பட்டிருக்கும. நோன்பு இல்லாதவர்கள் மறைந்து தான் சாப்பிடுவார்கள். வெள்ளி லீவு அன்று ராஜாமடம் ஆறு வரை நடந்து சென்று வருவோம். நாங்கள் அகமது & கோ காம்பவுண்டில் வசித்தபோது மெஸ் நடத்தினோம்.ஒரு தடவை எங்களுக்கு சம்பளம் போட இரண்டு மாதம் ஆனது. அப்போது மெஸ் நடத்த ராமமூர்த்தி என்ற ஆரம்பப்பள்ளி ஆசிரியர் ஊரில் அவருக்குத் தெரிந்த நபரிடம் வட்டிக்கு பணம் வாங்கிக் கொடுத்து மெஸ் நடத்த உதவி செய்தார். வேறு என்ன வழி அன்னிய ஊரில்? அந்த ராமமூர்த்தியை இன்றும் மறப்பதில்லை.வேலை பார்த்த 3 வருடத்தில் ஒரே தடவை கல்லூரி மேனேஜ்மென்ட்டுக்கு வேண்டியவர் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொண்டேன். அங்கே ஒரே தட்டில் 5 அல்லது 6 நபர்கள் உட்கார்ந்து சாப்பிடும் பழக்கத்தினைக் கண்டேன். இது இஸ்லாம் போதித்த சமத்துவ-சகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டு என்றால் மிகையாகாது.மேடைப்பள்ளி கட்டி முடித்து திறப்பு விழாவும் நடந்தது. அதில் இசை முரசு தனது சங்கநாதத்தால் இறைவனை புகழ்ந்தது அவருக்கு இணை அவரேதான் என்றளவிற்கு இருந்தது.






-தொடரும்

No comments:

Post a Comment