Saturday, March 25, 2017

சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் மாற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை



சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார் என்ற திமுக புகாரின் அடிப்படையில் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி உத்தரவிட்டுள்ளது. புதிய போலீஸ் கமிஷனராக கரன்சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு காலியாக உள்ள ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதிக்கு ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த 9ம் தேதி பிறப்பித்தது. அறிவிப்பு செய்த அன்றே நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், கடந்த முறை பொதுத் தேர்தலின்போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் எழுந்ததால் மாற்றப்பட்டார்.
கமிஷனர் ஜார்ஜ் இந்த முறையும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார்கள் அப்போது எழுந்தன. இதனால், இப்போதும், அவர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார். எனவே அவரை போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்து உடனடியாக மாற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் செய்தது. இந்தப் புகார் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது.
அதைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் ஜார்ஜை மாற்ற முடிவு செய்துள்ளதால், புதிய போலீஸ் கமிஷனரை நியமிப்பதற்காக 3 போலீஸ் அதிகாரிகளின் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. அவரும், தற்போது ஏடிஜிபிக்களாக உள்ள கரன்சின்ஹா(சிபிசிஐடி), அசுதோஷ் சுக்லா(மதுவிலக்கு), திரிபாதி(சட்டம் ஓழுங்கு) ஆகியோரது பெயர்களை அனுப்பினார். அசுதோஷ் சுக்லா, கரன்சின்கா ஆகியோரில் யாரை நியமிப்பது என்று ஆலோசனை நடத்தினர். அசுதோஷ் சுக்லா கடந்த பொதுத் தேர்தலின்போது ஜார்ஜ் மாற்றப்பட்ட பிறகு, போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டவர். இவர்களில் ஓருவர்தான் போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கரன்சின்ஹா புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனிடையே போலீஸ் கமிஷனர் ஜார்ஜை இடமாற்றம் செய்வதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. ஜார்ஜுக்கு புதிய பதவி வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. சென்னை நகர போலீஸ் கமிஷனர் அதிரடியாக மாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் புகாரை ஏற்று முதலில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை நடத்தும் அதிகாரி பத்மஜா தேவி மாற்றப்பட்டு பிரவீண் நாயர் நியமிக்கப்பட்டார். இப்போது போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, March 24, 2017

தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர் கைது


கோவையில் இளைஞர் அபுதாகிர் கைதை கண்டித்து தஞ்சை இரயில்வே நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், கோவையில் அப்பாவி இளைஞர் அபுதாகிர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்த சிபிசிஐடி போலீசாரை கண்டித்து முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
ஆர்ப்பட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இலியாஸ் தலைமை வகித்தார். 


விராட் கோலி தோள்பட்டையில் காயம் : ஆஸிக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்ப்பு!


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி தரம்சலாவில் நடைபெறுகிறது, இந்தப் போட்டியில் கேப்டன் விராட் கோலி விளையாடுவாரா என்பது பற்றி உறுதியான தகவல்கள் இல்லாத நிலையில் மும்பை வீர்ர் ஸ்ரேயஸ் ஐயர் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தான் 100% உடல்தகுதி பெற்றால் மட்டுமே தரம்சலா டெஸ்ட் போட்டியில் ஆடுவதாக விராட் கோலி தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

ராஞ்சி டெஸ்ட் போட்டியில் பீல்டிங் செய்யும் போது பவுண்டரியை தடுக்கும் முயற்சியில் விராட் கோலியின் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் அந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள், 2-ம் நாள் ஆட்டத்தின் பெரும்பகுதியில் மைதானத்தில் இல்லாத நிலை ஏற்பட்டது.

தற்போது தரம்சலா டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா என்பது உறுதியாகாத நிலையில் மும்பை வீரர் ஸ்ரேயஸ் ஐயர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஸ்ரேயஸ் ஐயர் இரட்டைச் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.

நான்காவது டெஸ்டிற்கு இந்திய அணி: விராத் கோஹ்லி (கேப்டன்), முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, ரஹானே, ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், கருண் நாயர், ஜெயந்த் யாதவ் , குல்தீப் யாதவ், அபினவ் முகுந்த், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் முகமது ஷமி.

Thursday, March 23, 2017

"நோக்கியா பாணியில்" எல்ஜி ஸ்டைலஸ் 3 (விலை, அம்சங்கள்) அறிமுகம்.!



எந்த விதமான ஆடம்பர நிகழ்வும் இன்றி நோக்கியா நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு கருவிகளை அறிமுகம் செய்த பாணியில் எல்ஜி நிறுவனம் மிகவும் அமைதியாக அதன் ஸ்டைலஸ் 3 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரூ.18,500/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ள எல்ஜி ஸ்டைலஸ் 3 தற்போது நிறுவனத்தின் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் வரும் நாட்களில் விற்பனை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்ஜி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஸ்டைலஸ் 3 கருவியின் குறிப்பிடப்பட்டுள்ளவிலையில் இருந்துசற்று குறைவான விலைக்கு தான் சந்தையில் அறிமுகம் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டைலஸ் கடந்த டிசம்பர் மாதம் சிஇஎஸ் 2017 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கருவியில் எழுத்தாணி (stylus) என்பது ஒரு பெரிய அம்சமாக உள்ளது. அது உங்கள் செயல்பாடுகளை எளிமையாக்க உதவும் உடன் ஒரு படத்தை எடிட் செய்ய அற்புதமாக பயன்படும் மற்றும் பல கோணங்களை ஸ்டைலஸ் மூலம் அணுகலாம்.
ஸ்க்ரீன் ஆஃப் மெமோ அம்சம் எல்ஜி ஸ்டைலஸ் 3 ஆனது எழுத்தாணி உதவியுடன் ஸ்க்ரீன் ஆஃப் செய்ய உதவும் ஸ்க்ரீன் ஆஃப் மெமோ அம்சம் கொண்டு வருகிறது. மற்றும் பென் கீப்பர் அம்சமும் கொண்டுள்ளது உடன் இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர், டச் ஷட்டர் மற்றும் டச் ஸ்க்ரீன் ஆகிய அம்சங்களும் அடக்கம்.
டிஸ்ப்ளே எல்ஜி ஸ்டைலஸ் 3 கருவியானது 258பிபிஐ என்ற ஒரு பிக்சல் அடர்த்தி கொண்ட 5.7 அங்குல எச்டி (720x1280 பிக்சல்கள்) டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் 1.5ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட ஒரு ஆக்டா-கோர் மீடியா டெக் எம்டி 6750 செயலி மூலம் இயக்கப்படுகிறது.
சேமிப்பு உடன் இக்கருவி எல்பிடிடிஆர்3 ரேம் அடிப்படையிலான 3ஜிபி மற்றும் 16ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு கொண்டு மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 2டிபி வரை நீட்டிப்பு ஆதரவும் அளிக்கிறது.
கேமரா ஒரு 13 மெகாபிக்சல் பின்புற சிஎம்ஓஎஸ் ஆட்டோ ஃபோகஸ் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது மற்றும் இரண்டு கேமராக்களுமே எல்இடி ப்ளாஷ் கொண்டுள்ளது.
பேட்டரி ஒரு 3200எம்ஏஎச் நீக்கக்கூடிய பேட்டரி ஆதரவு கொண்ட இக்கருவி ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும். பெயர் குறிப்பிடுவதுபோல், எல்ஜி ஸ்டைலஸ் 3 எழுத்தாணி பேனா அம்சத்தை ஆதரிக்கிறது உடன் 4ஜி எல்டிஇ இணைப்பு அம்சம் கொண்டு வருகிறது. அளவீட்டில் 155.6x79.8x7.4மிமீ மற்றும் 149 கிராம் எடையுடையது.


சசிகலா அணிக்கு தொப்பி, ஓபிஎஸ் அணிக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னங்கள்: தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு


ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதையடுத்து, சசிகலா அணிக்கு தொப்பி சின்னமும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சசிகலா தரப்பு ஆட்டோ, பேட் மற்றும் தொப்பி ஆகிய சின்னங்களைத் தெரிவு செய்திருந்தது. இந்நிலையில் ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் சசி அணிக்கு ஒதுக்கப்பட்டது, ஆனால் ஆட்டோ சின்னம் வேண்டாம் என்று சசி தரப்பினர் கோரியதையடுத்து தேர்தல் ஆணையம் தொப்பி சின்னத்தை ஒதுக்கியது. மேலும் அதிமுக அம்மா என்று கட்சிப்பெயர் வேண்டுமெனவும் சசி தரப்பினர் சமர்ப்பித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் அணி அம்மா அதிமுக என்ற கட்சிப்பெயரை சமர்ப்பித்தது, ஆனால் தேர்தல் ஆணையம் பெயரை மாற்றுமாறு அறிவுறுத்த அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்று கட்சிப் பெயரை மாற்றியுள்ளது. 

இதனையடுத்து ஓபிஎஸ் அணிக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். 

ஆகவே, ஆர்.கே.நகர் தேர்தலில் சசி தரப்பில் போட்டியிடும் டிடிவி தினகரன் தொப்பி சின்னத்திலும், ஓபிஎஸ் தரப்பில் போட்டியிடும் மதுசூதனன் இரட்டை விளக்கு மின்கம்பம்சின்னத்திலும் போட்டியிடுகிறார்கள்.

Wednesday, March 22, 2017

இரட்டை இலையை முடக்கியது தேர்தல் ஆணையம்! அதிமுக பெயர், கொடியை பயன்படுத்தவும் தடை!


டெல்லி: ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச்சின்னம் யாருக்கும் வழங்கப்படாது- அது முடக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு இரண்டாவது முறையாக இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டுள்ளது. அதிமுக சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்ததை அடுத்து அதிமுகவின் வெற்றிச் சின்னமான இரட்டை இலையை கைப்பற்ற இரு தரப்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் இன்று காலை முதலே இரு தரப்பினரிடமும் தேர்தல் ஆணையம் நேரில் விசாரணை நடத்தியது. இருதரப்பினரும் தங்களின் வாதங்களை முன் வைத்தனர். மாலை 5 மணியுடன் வாதங்கள் முடிந்த நிலையில் முடிவுகள் மாலையே வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இரட்டை இலை முடக்கம் இந்நிலையில் ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச்சின்னம் யாருக்கும் வழங்கப்படாது. முடக்கி வைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கட்சி பெயரை பயன்படுத்தவும் தடை எம்.ஜிஆர். மறைவுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக என்ற பெயரை இருதரப்பும் பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இடைக்கால உத்தரவுதான் இரு தரப்பும் புதிய கட்சியின் பெயரை வியாழக்கிழமை காலை 10 மணிக்குள் தெரிவிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலைச் சின்னம் முடக்கம் என்பது இடைக்கால உத்தரவுதான் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
உடனே தீர்ப்பு வழங்குவது கடினம் 20 பக்க ஆவணங்களை படித்து உடனடியாக தீர்ப்பு வழங்குவது கடினம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க வரும் எப்ரல் 17ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் இருதரப்புக்கும் கெடு விதித்துள்ளது.
நியாயமாக நடக்கவே முடக்கம் இரு தரப்புக்கும் நியாயமாக நடந்து கொள்ளவே சின்னம் முடக்கப்பட்டது. ஓரிரு நாளில் தெளிவான முடிவை எடுக்க இயலவில்லை. இன்று இரு தரப்பினருக்கும் புதிய சின்னம் ஒதுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரண்டவது முறையாக முடக்கம் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு இரட்டை இலைச்சின்னம் இரண்டாவது முறையாக முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sunday, March 19, 2017

16எம்பி செல்பீ கேமரா கொண்ட விவோ ஒய்66.!


ரியர் கேமராவாக இருக்கட்டும் அல்லது செல்பீ கேமராவாக இருக்கட்டும் - இரண்டிலுமே ஸ்மார்ட்போன் கேமரா தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்ட பெருமை விவோ நிறுவனத்தையே சேரும். அப்படியான விவோ நிறுவனத்தின் சமீபத்திய கருவியொன்று எதிர்பார்த்தபடியே இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. சீன மொபைல் உற்பத்தியாளரான விவோ நிறுவனம் இறுதியாக அதன் விவோ ஒய்66 ஸ்மார்ட்போனை அதன் ஒய் தொடரின் கீழ் மென்மையான ப்ளாஷ் கொண்ட ஒரு 16 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்ட கருவியாக அறிமுகம் செய்துள்ளது.

Friday, March 17, 2017

ரேஷன் கடைகளில், இனி உளுத்தம் பருப்பு சப்ளை இருக்காது.. மக்கள் போராட்டம் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


மிழக ரேஷன் கடைகளில், சிறப்பு பொது வினியோக திட்டத்தில், தலா, ஒரு கிலோ துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, 30 ரூபாய்; ஒரு லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கு விற்கப் பட்டது. அவற்றை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தனியாரிடம் வாங்கி, ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்கிறது. 

Thursday, March 16, 2017

பிஎஸ்என்எல் அதிரடி : ரூ.339/-க்கு 2ஜிபி+அன்லிமிடெட் கால்ஸ்.!


இந்திய அரசு நடத்தும் பிஎஸ்என்எல் நிறுவனமானது ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரைம் சேவைகளை எதிர்கொள்ளும் நோக்கத்தில் அதன் புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது.

Tuesday, March 14, 2017

இந்தியாவில் இருக்கும் பிரிட்டீஷ் நிறுவனத்திற்கு சொந்தமான ரயில்பாதை !

இந்தியாவில் இருக்கும் பிரிட்டீஷ் கம்பெனிக்கு சொந்தமான ரயில்பாதை ஒன்றில், ரயிலை இயக்குவதற்காக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்வரை கட்டணம் செலுத்திக்கொண்டிருக்கிறது இந்திய ரயில்வே.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1951 ஆம் ஆண்டே நாட்டில் உள்ள அனைத்து ரயில்பாதைகளும் தேசிய உடைமையாக்கப்பட்டுவிட்டது. ஆனால்  1921-ம் ஆண்டு சகுந்தலா ரயில்வேஸ் (தற்போது Killick-Nixon எனும் பெயரால் இயங்கிவருகிறது) எனும் பிரிட்டீஷ் நிறுவனத்தால் போடப்பட்ட  மகாராஷ்ட்ராவின் அச்சல்ப்பூர் - யாவத்மால் பகுதிகளை இணைக்கும்  ரயில்பாதை மட்டும்  இதற்கு விதிவிலக்காகும்.  190 கி.மீ தூரம்கொண்ட இந்த ரயில்பாதை மட்டும் இன்றும் சகுந்தலா ரயில்வேஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

மகாராஷ்ட்ராவின் அமரவாதி மாவட்டத்தில் உள்ள மக்களின் போக்குவரத்திற்காக பெரிதும் பயன்படும் இந்த ரயில்பாதை, விதர்பா பகுதியின் ராணி எனவும் அம்மக்களால் அழைக்கப்படுகிறது. 4 மணி நேரத்தில் கடக்கக்கூடிய 190 கி.மீ தூரம் கொண்ட இந்த ரயில்பாதை நெடுகிலும் மலைகள், காடுகள் என இயற்கை சூழ்ந்த பகுதிகளாக இருப்பதால், இந்த வழியில் பயணம் செய்யும் மக்களுக்கு ஒரு ரம்யமான அனுபவத்தையும் பெற்றுவருகின்றனர். பிரிட்டீஷ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த இருப்புப்பாதையில் ரயில்களை இயக்குவதற்காக ஆண்டுக்கு ஒருகோடி ரூபாய்வரை அந்நிறுவனத்திற்கு இந்திய ரயில்வே துறை ராயல்டி வழங்கிவருகிறது.

Monday, March 13, 2017

அதிரையில் ரேஷன் கடைகள் முன்பு திமுகவினர் போராட்டம்

தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அளிப்பதில்லை என்பது திமுகவினர் குற்றச்சாட்டு. பல தொகுதிகளில் திமுக எம்எல்ஏக்கள் ஆய்வு நடத்தி ஸ்டாலினுக்கு அறிக்கை அளித்தனர்.
இதனையடுத்து மாநிலம் முழுவதும் இன்று ரேசன்கடைகளை திமுகவினர் முற்றுகையிட்டனர். அதிராம்பட்டினத்தில் ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய அதிரை பேரூர் திமுகவினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Sunday, March 12, 2017

ஐந்தாம் தலைமுறை (5G) அலைக்கற்றை ஏலத்தை இந்த ஆண்டில் நடத்த அரசு முடிவு

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தை இந்த ஆண்டில் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. 

3,000 மெகா ஹெர்ட்சுக்கும் மேற்பட்ட அலைவரிசை கொண்ட ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றைகளை முதன்முறையாகத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏலம்விட அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான கோப்பைத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்குத் தொலைத்தொடர்பு அமைச்சகம் அனுப்பியுள்ளது. 

3,300 மற்றும் 3,400 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை கொண்ட இந்தக் கற்றைகள் மூலம் அதிகத் துல்லியம் கொண்ட படக்காட்சிகளை உடனடியாக அனுப்பவும் பதிவிறக்கம் செய்யவும் முடியும். 

ஐந்தாம் தலைமுறை (5G) அலைக்கற்றை ஏலத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏலம் எடுக்கும் நிறுவனங்கள் 2020ஆம் ஆண்டில் இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தகவல் தொடர்பை அளிக்க முடியும்.

இஸ்லாமியர்களுக்கு முதல் குரல் கொடுக்கும் இயக்கம் திமுக'


இஸ்லாமியர்களின் நலன், உரிமைக்காக எப்போதும் திமுக முதல் குரல் கொடுக்கும் என, அக்கட்சியின் செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி, சிறுபான்மையினர் உரிமைப் பாதுகாப்பு மாநில மாநாடு திருநெல்வேலி பொருள்காட்சித் திடலில் 2 தினங்கள் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை அக்கட்சியின் சாதனை, வரலாற்று நிகழ்வுகள், தகவல்கள் அடங்கிய கண்காட்சி நடைபெற்றது. சனிக்கிழமை நடைபெற்ற 2ஆம் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று மு.க. ஸ்டாலின் பேசியது: திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு இடையிலான உறவு தொன்றுதொட்டு இருந்து வரும் தொட்டில் உறவு போன்றது.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்த காலத்தில்தான் சிறுபான்மை மக்களுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. முகம்மது நபிகள் பிறந்த தினம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது; இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு, சமச்சீர் கல்வியில் சிறுபான்மையினர் பங்களிப்பு போன்றவை திமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்டது.
மதச்சார்பற்ற நாட்டில் மக்களின் வாழ்க்கை முறையில் தலையிட அரசுக்கு உரிமை கிடையாது. அந்த வகையில் பொது சிவில் சட்டம் கொண்டுவருவதை திமுக அனுமதிக்காது. இஸ்லாமிய மக்கள் நலன், உரிமைக்காக முதல் குரல் கொடுக்கும் இயக்கமாக திமுக இருக்கும் என்றார் அவர்.
மாநாட்டுக்கு தலைமை வகித்து கட்சியின் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் பேசியது: தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி அமைய ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் வெற்றிப் படிக்கட்டாக அமையும். 13இல் திமுக நடத்தும் போராட்டம், 19இல் குமரி அனந்தன் மேற்கொள்ளும் மதுவிலக்கு நடைப்பயணத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளிக்கும் என்றார் அவர்.
திருநாவுக்கரசர்: மாநாட்டில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் பேசியது: இஸ்லாமிய மக்களுக்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
பொது சிவில் சட்டம் கொண்டு வர அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தில் திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் இணைந்து நல்லாட்சி அமைய காங்கிரஸ் துணை நிற்கும் என்றார் அவர்.
மாநாட்டில், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள மாநிலத் தலைவர் செய்யது முனவ்வர்அலிதங்கள், கட்சியின் முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல்ரஹ்மான், மாநிலச் செயலர்கள் நெல்லை மஜீது, காயல் மகபூப், மாநில துணைத் தலைவர்கள் எஸ்.எம். கோதர் மைதீன், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், எம்.எல்.ஏ.க்கள் டி.பி.எம். மைதீன்கான், ஏ.எல்.எஸ். லட்சுமணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பூங்கோதை ஆலடி அருணா, ஆஸ்டின், ராஜேஷ்குமார், திமுக மாவட்டச் செயலர்கள் மு. அப்துல்வஹாப், இரா. ஆவுடையப்பன், சிவ. பத்மநாபன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலர்கள் பாட்டபத்து எம். முகம்மதுஅலி, வி.எம். இக்பால், பொருளாளர்கள் கானகத்திமீரான், செய்யதுஇப்ராஹீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Saturday, March 11, 2017

அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி விவசாயி பலி


நெய்வேலி அருகே அமைச்சர் எம்.சி.சம்பத்தின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நெய்வேலி வழியாக விருத்தாசலத்திற்கு சென்று கொண்டிருந்தார். நெய்வேலியில் என்.எல்.சி மருத்துவமனை அருகே அமைச்சரின் வாகனம் சென்று கொண்டிருந்தது. 
அப்பபோது பின்னால் வந்த அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் சாலையோரம் நடந்து சென்ற முதியவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அந்த முதியவர் என்எல்சி பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கடலூர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. விசாரணையில் அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி உயிரிழந்த முதியவர் செடுத்தான்குப்பம் கிராமத்தை சேர்ந்த 58 வயதான தங்கராசு என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து நெய்வேலி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Friday, March 10, 2017

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் மேலாளர் பணி .. வேகமாக விண்ணப்பியுங்கள்!


ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 16 மார்ச் 2017ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எழுத்துத் தேர்வில் ஆப்ஜக்டிவ் டைப் மற்றும் டிஸ்கிரிப்டிவ் டைப் என இரண்டு பகுதிகள் காணப்படும். இரண்டுப் பகுதி தேர்வும் ஒரே நாளில் நடத்தப்படும். தனித் தனி செஸனாக நடத்தப்படும. டிஸ்கிரிப்டிவ் தேர்வு பகுதி ஆன்லைன் அல்லது ஆப்லைனில் நடத்தப்படும்.

காலிப் பணியிடங்களின் விபரங்கள் -
மேலாளர் - (டெக்னிக்கல் சிவில்) கிரேடு பி - 2 காலியிடங்கள் 
உதவி மேலாளர் - (ஆட்சி மொழி) கிரேடு ஏ - 10 காலியிடங்கள் 
உதவி மேலாளர் - (செக்யூரிட்டி) கிரேடு ஏ - 07 காலியிடங்கள்
கல்வித் தகுதி - 
மேலாளர் பணிக்கு - சிவில் எஞ்ஜினியரிங் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் அல்லது அதற்கு இணையான தகுதியினைப் பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் 60% மார்க்குகளைப் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

உதவி மேலாளர் பணிக்கு - முதுகலைப் பட்டப்படிப்பில் (இரண்டாம் வகுப்பு) தேர்சிசி பெற்றவர்கள் மற்றும் முதுகலை ஆங்கிலம் அல்லது ஹிந்தி படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஹிந்தி மொழிப்பெயர்ப்பு தெரிந்த முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு - 08.11.1988 ஆம் தேதிக்கு பின் பிறந்தவர்களும், 07.11.1996 ஆம் தேதிக்கு முன் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். அதாவது 20வயதிற்கு மேற்பட்டவர்களும் 28 வயதிற்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு - 5 வருடம் 
ஒபிசி பிரிவினருக்கு - 3 வருடம் 
மாற்றுத்திறனாளி ஜெனரல் - 10 வருடம், ஓபிசி - 13 வருடம், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 15 வருடமும் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படுகிறது.

விண்ணப்பக்கட்டணம் - ஜெனரல் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு rs. 600/- விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 
எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு rs. 100/- விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

முக்கிய தேதிகள்
மார்ச் 1ம் தேதியிலிருந்து மார்ச் 16ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 
ஆன்லைன் பிரிண்ட் அவுட் எடுப்பதற்கான கடைசி தேதி - 22 மார்ச் 2017 
மேலும் விபரங்களுக்கு www.rbi.org.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: திமுகவுக்கு மமக ஆதரவு


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிக்க மனிதநேய மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது. இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியினர் பிரச்சாரம் செய்வார்கள்.
வறட்சி, காவிரிப் பிரச்சினை, பவானியின் குறுக்கே கேரளா அணைப் பிரச்சினை, விவசாயிகள் தற்கொலை, குடிநீர்ப் பஞ்சம், நியாய விலைக் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு, மீனவர்கள் படுகொலை, நிதி நெருக்கடி பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளில் தற்போதைய நிலையற்ற அதிமுக அரசு எந்தவித உருப்படியான நடவடிக்கையையும் எடுக்காததால் தமிழக மக்கள் கடுமையான பாதிப்பிற்கு இலக்காகியிருக்கிறார்கள்.
மக்களை மேலும் வஞ்சிக்கும் வகையில் இந்தியாவில் வேறு எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அதிகபட்சமான மதிப்பு கூட்டு வரியை பெட்ரோல், டீசல் மீது அதிமுக அரசு விதித்துள்ளது. பால் விலையும் சப்தமில்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது.
இத்தகைய மக்கள் விரோத அரசுக்கு தகுந்த தண்டனை வழங்க ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் நல்லதோர் வாய்ப்பாக அமைந்துள்ளது. இத்தேர்தலில் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயலாற்றும் திமுகவுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் இத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்'' என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் பலமுனை போட்டிக்கு வாய்ப்பு: ஆர்.கே.நகரில் களமிறங்கப் போவது யார், யார்? - தமிழக அரசியலில் தொடங்கியது பரபரப்பு

பலமுனைப் போட்டிக்கு வாய்ப் புள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்த லில் களமிறங்கப் போவது யார், யார் என்ற பரபரப்பு தொடங்கி யுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிமுகவில் சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என 2 அணிகள் செயல்பட்டு வருகின்றன. ‘எம்ஜிஆர் - அம்மா - தீபா பேரவை’ என்ற அமைப்பை தொடங்கியுள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் சசிகலா தலைமையிலான அதிமுகவைவிட அதிக வாக்குகளை பெறாவிட்டால் ஓபிஎஸ், தீபாவின் அரசியல் எதிர் காலம் கேள்விக்குறியாகிவிடும். அதேபோல ஓபிஎஸ், தீபாவைவிட குறைவாக வாக்குகளை பெற்றால் சசிகலா தரப்பினர் கடும் நெருக் கடியை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே சசிகலா, ஓபிஎஸ், தீபா என மூவருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒரு சோதனைக் களமாக அமைந்துள்ளது.
ஆர்.கே.நகரில் வென்றால் ஜெய லலிதா மரணம் தொடர்பாக எழுப்பப் படும் சந்தேகங்கள் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் முடிவுக்கு வரும் என சசிகலா தரப்பினர் நினைக்கின்றனர். எனவே, ஒரு வலு வான வேட்பாளரை நிறுத்துவது குறித்து அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆலோ சித்து வருவதாக கூறப்படுகிறது.
டிடிவி தினகரனே இங்கு போட்டி யிடக் கூடும் என அதிமுக வட்டாரங் கள் தெரிவிக்கின்றன. அதே நேரத் தில் மாற்று ஏற்பாடாக முன்னாள் அமைச்சர்கள் பி.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா பெயர்களும் பரி சீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் இ.மதுசூதனன், வட சென்னை நிர்வாகி ராஜேஷ் ஆகியோரில் ஒருவர் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சசிகலா தரப்பிலும் திமுகவிலும் பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் தங்கள் தரப்பிலும் பெண் வேட்பா ளரை நிறுத்த ஓபிஎஸ் ஆலோசித்து வருவதாக அவரது ஆதரவாளர் ஒரு வர் 'தி இந்து'விடம் தெரிவித்தார்.
திமுக சார்பில் மீண்டும் சிம்லா முத்துச்சோழன் போட்டியிடவே அதிகம் வாய்ப்பிருப்பதாக அக்கட்சி யினர் தெரிவிக்கின்றனர். ஆனால், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச் சினையால் திமுகவுக்கான வாய்ப்பு அதிகம் என்பதால் சட்டத்துறை செய லாளர் இரா.கிரிராஜன், இளைஞ ரணி துணைச் செயலாளர் ஆர்.டி. சேகர் என பலரும் வாய்ப்பு கேட் டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந் திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத் தைகள் கட்சி அடங்கிய மக்கள் நலக் கூட்டணி, பாஜக சார்பில் வேட் பாளர்கள் நிறுத்தப்பட வாய்ப்புள் ளது. தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுவது உறுதியாக தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும் ஆர்.கே. நகரில் பலமுனை போட்டி உறுதி யாகியுள்ளது.

Thursday, March 9, 2017

நெடுவாசலுக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்க ஐகோர்ட் உத்தரவு

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சென்னையில் மாணவர்கள் நடத்தவி ருக்கும் உண்ணாநிலை போராட்டத்திற்கு அனுமதி வழங்க காவல்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு கடந்த மாதம் 15 ஆம் தேதி மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனை எதிர்த்து கடந்த 20 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுக்க போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மார்ச் 2 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம் நடத்த அனுமதி கோரி மாணவர்கள் சார்பில் சென்னை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையரிடம் கடந்த மாதம் 24 ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல் துறை தரப்பு அந்த மனுவை நிராகரித்தது. இதை எதிர்த்து மாணவர்கள் சார்பில் சென்னையை சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அந்த மனுவில் "ஹைட்ரோ திட்டத்தை எதிர்த்து மாணவர்கள் நடத்தும்  போராட்டத்திற்கு மட்டும் காவல்துறை அனுமதியளிக்கவில்லை என்றும் வேறோரு நாளில் போராட்டம் நடத்த அனுமதியளிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு  இன்று  நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு விசாயணைக்கு வந்தது , "மாணவர்கள் காவல்துறையிடம்  புதிதாக மனு வழங்கவும், அதற்கு காவல்துறை ஆணையர் அனுமதி யளிக்கவும் உத்தரவிட்டு" வழக்கை முடித்து வைத்தார்.

Wednesday, March 8, 2017

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது: 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்- காப்பி அடிப்பதை தடுக்க 6,403 பறக்கும் படைகள்


தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு இன்று காலை தொடங்குகிறது. 10 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுக் கூடங்களில் காப்பி அடிப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் 6,403 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடையும் என்று அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, இத்தேர்வு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. தமிழகம், புதுச்சேரியில் 12,187 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 98 ஆயிரத்து 383 பேர், மாணவிகள் 4 லட்சத்து 95 ஆயிரத்து 784 பேர். பள்ளி மாணவர்கள் தவிர 39,741 தனித்தேர்வர்கள், 224 சிறைக் கைதிகளும் தேர்வு எழுதுகின்றனர். சென்னை மாவட் டத்தில் 571 பள்ளிகளைச் சேர்ந்த 51,658 மாணவ, மாணவிகள் 209 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
காலை 9.15 முதல் 12 மணி வரை
தினமும் காலை 9.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தேர்வு நடைபெறும். காலை 9.15 மணிக்கு வினாத்தாள் தரப்பட்டு, அதை படித்துப் பார்க்க 10 நிமிடம் அவகாசம் கொடுக்கப்படும். 9.25 முதல் 9.30 வரை வினாத்தாள், விடைத்தாள் விவரங்களை மாணவர்கள் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 12 மணிக்கு நிறைவடையும்.
எஸ்எஸ்எல்சி தேர்வுக்காக மொத்தம் 3,371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக் கூடத்தில் மாணவர்கள் காப்பி அடிப்பது, பிட் அடிப்பது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் தடுக்க மாநிலம் முழுவதும் 6,403 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் இடம்பெற்று உள்ளனர்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகள் நீங்கலாக, ஒவ்வொரு மாவட் டத்திலும் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சிறப்பு பறக்கும் படையினரும் தேர்வு மையங்களுக்கு சென்று திடீர் சோதனை மேற்கொள்வார்கள்.
இறுதிக்கட்ட முன்னேற்பாடுகள்
தேர்வுக்கான இறுதிக்கட்ட முன்னேற்பாடுகள் நேற்று அனைத்து தேர்வு மையங்களி லும் மும்முரமாக மேற்கொள் ளப்பட்டன. தேர்வு அறைகளில் மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யும் வகையில் மேஜைகளில் அவர்களது பதிவெண்களை எழுதுவது, ஒவ்வொரு அறை யிலும் தேர்வு எழுதும் மாண வர்களின் பதிவெண் விவரங்களை எழுதுவது போன்ற பணிகளில் தேர்வுத்துறை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
தேர்வுப் பணியை ஆய்வு செய்ய ஒவ்வொரு மாவட் டத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ள பள்ளிக்கல்வித் துறையைச் சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் தேர்வு மையங் களுக்கு சென்று பார்வை யிட்டனர்.

Sunday, March 5, 2017

தமிழகத்தில் வாட் வரி அதிகரிப்பால் பெட்ரோல், டீசல் விலை மிக கடும் உயர்வு!


தமிழகத்தில் வாட் வரி அதிகரிப்பால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 3.78, டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.76 என நள்ளிரவு முதல் உயர்ந்துள்ளது. பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவீதத்தில் இருந்து 34 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் டீசல் மீதான வாட் வரி 21.43 சதவிதத்தில் இருந்து 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வாட் வரி உயர்வால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 3.78 ஆக அதிகரித்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.76ஆக உயர்ந்துள்ளது. இவ்விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. தற்போது தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ74.47 ஆகவும் டீசல் விலை லிட்டர் ரூ62.63 ஆகவும் அதிகரித்துள்ளது. பொதுவாக எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. அதேநேரத்தில் மாநில அரசுகளின் வாட் வரி விதிப்பாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வது குறிப்பிடத்தக்கது.

Saturday, March 4, 2017

ஸ்டேட் வங்கியில் குறைந்த பட்ச இருப்புக் கட்டணம் 5 ஆயிரம் ரூபாயாக ஆக உயர்வு


டெல்லி : தனியார் வங்கிகள் பணப்பரிவர்த்தனைக்கான கட்டணங்களை கடுமையாக உயர்த்திவிட்ட நிலையில், பொதுத்துறை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கியும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய தொகையாக பெருநகரங்களில் 5 ஆயிரம் ரூபாய், இதர நகரங்களில் 3 ஆயிரம் ரூபாய், சிறிய நகரங்களில் 2 ஆயிரம் ரூபாய், கிராமப்புறங்களில் 1000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்த குறைந்தபட்ச தொகையை கணக்கில் வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 100 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மாதத்திற்கு மூன்று முறைக்கு மேல் வங்கிக்கிளைகளில் பணபரிவர்த்தனை செய்தால், 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இந்த நடைமுறை ஏப்ரல் ஒன்றாம் தேதி அமலுக்கு வருவதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஜியோ பயன்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... பிரைம் ஜியோ திட்டத்தில் கூடுதல் டேட்டா!



முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவில் மார்ச் 31-க்கு பிறகு, பிரைம் ஜியோ திட்டங்கள் குறித்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக 5 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ கடந்த செப்டம்பர் மாதம் இலவச டேட்டா, இலவச வாய்ஸ்கால்களை அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைய வேண்டிய இந்தத் திட்டம் கூடுதலாக மேலும் 3 மாதங்களுக்கு அதாவது, மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. ஜியோவின் இந்த சேவைகளை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இளைஞர்கள் விலை குறைந்த 4ஜி தொழில்நுட்பம் கொண்ட செல்போன்களை வாங்கினர். இந்நிலையில் இலவச சேவைகள் இம்மாத இறுதியில் நிறைவு பெறவுள்ளதை தொடர்ந்து அந்நிறுவனம் கட்டண திட்டங்களை (டாரிஃப் ரேட்ஸ்) அறிவித்தது.
ரூ.99-க்கு ரீசார்ஜ் 
ஏற்கெனவே ஜியோ கட்டண திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு ஜியோ பிரைம் எனும் புதிய திட்டத்தை சில தினங்களுக்கு முன் ஜியோ அறிவித்தது. ஜியோ பிரைம் திட்டத்திற்கு பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் ஒரு முறை கட்டணமாக ரூ.99-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 31, 2018 வரை வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
கூடுதல் டேட்டா
ஜியோ பிரைம் திட்டத்தை பதிவு செய்ததும் மாத ரீசார்ஜ் அடிப்படையில் ஜியோ திட்டங்களை தொடர்ந்து பயன்படுத்த முடியும். இந்நிலையில் ரூ.303-க்கு ரீசார்ஜ் செய்வோருக்கு கூடுதலாக 5 ஜிபி டேட்டா வழங்குவதாக ஜியோ அறிவித்துள்ளது.
முதல் மாதத்துக்கு மட்டுமே 
ஜியோ பிரைம் திட்டத்திற்கு பதிவு செய்ய மார்ச் 31, 2017 கடைசி தேதியாகும். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் டேட்டா மூலம் நாள் ஒன்றிற்கு 1ஜிபி என்ற அளவை கடந்த பின் இன்டர்நெட் வேகம் குறையாது. எனினும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் டேட்டா முதல் மாதத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
56 ஜிபி டேட்டா 
இதே போல் ரூ.499 மற்றும் அதற்கும் மேல் ரீசார்ஜ் செய்வோருக்கு கூடுதலாக 10 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. முன்னதாக 56 ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும் கூடுதல் டேட்டா முதல் மாதத்திற்கு மட்டுமே வழங்கப்படும்.
பிரைம் ஜியோவில் என்னென்ன? 
முதலில் ரூ.303-க்கு ஜியோ பிரைம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் வாடிக்கையாளர்களுக்கு தற்சமயம் வழங்கப்படும் ஜியோ புத்தாண்டு சலுகையை 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும். அந்த வகையில் தினமும் 1ஜிபி வரை அதிவேக 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ், எஸ்எம்எஸ், ஜியோ செயலி பயன்பாடு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. ஜியோவின் இலவச சேவைகளால் தங்களின் தொழில் பாதிக்கப்படுவதாக வோடஃபோன் நிறுவனம் டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





Wednesday, March 1, 2017

11 சிக்சர்களுடன் மார்டின் கப்தில் சாதனை 180 நாட் அவுட்: தென் ஆப்பிரிக்காவை நொறுக்கியது நியூஸிலாந்து



ஹேமில்டனில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-2 என்று சமன் செய்தது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 279 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய நியூஸிலாந்து அணி மார்டின் கப்திலின் அதிரடியில் (180 நாட் அவுட், 15 பவுண்டரிகள் 11 சிக்சர்கள்) 45-வது ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இன்னமும் ஒரு போட்டி மீதமிருக்க 2-2 என்று ஒருநாள் தொடரை சமன் செய்துள்ளது. 

உலகக்கோப்பை 2015-ல் மார்டின் கப்தில் அடித்த இரட்டைச் சதத்திற்கு எந்த விதத்திலும் குறைவில்லாத அதிரடி இன்னிங்ஸ் ஆகும் இது. இதன் மூலம் இலக்கை விரட்டும் போது தனிப்பட்ட முறையில் எடுத்த அதிகபட்ச ஸ்கோரில் 4-வது இடம் பிடித்தார் கப்தில், அதாவது ஷேன் வாட்சனின் 185, தோனியின் 183 நாட் அவுட், விராட் கோலியின் 183 ஆகிய மகாவிரட்டல் இன்னிங்ஸிற்குப் பிறகு மார்டின் கப்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விரட்டலில் அதிகபட்ச ரன்களை எடுத்து சாதனை புரிந்தார். 

138 பந்துகளைச் சந்தித்த மார்டின் கப்தில் 15 பவுண்டரிகல் 11 சிக்சர்களுடன் 180 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து நியூஸிலாந்தை வெற்றிக்கு இட்டுச் சென்றார். 45-வது ஓவரில் இம்ரான் தாஹிரை மிட்விக்கெட் மற்றும் நேராக இரண்டு மிகப்பெரிய சிக்சர்களை அடித்து ஆட்டத்தை ஆகிருதியுடன் முடித்தார் கப்தில். அதிக சிக்சர்களுக்கான சாதனையையும் சமன் செய்தார் அவர். 11-ல் குறைந்தது 3 சிக்சர்கள் மைதானத்துக்கு வெளியே சென்றது. 126 ரன்களை பவுண்டரி, சிக்சர்களிலேயே விளாசினார்.

கப்திலின் 12-வது ஒருநாள் சதம் 82 பந்துகளில் வந்தது. 62-ல் பிரிடோரியஸ் பந்தில் எல்.பி.என்று நடுவரால் தீர்ப்பளிக்கப்பட்டு ரிவியூவில் தப்பினார் கப்தில். ஆனால் அவர் ஷாட்களில் அதிக சக்தி இருந்தது. பார்னெலை பெரிய சிக்சரையும் மோரிஸை அதைவிட பெரிய சிக்சர்களையும் அடித்த கப்தில் 38 பந்துகளில் அரைசதம் கண்டார். அடுத்த 50 ரன்கள் 44 பந்துகளில். உண்மையில் சொல்லப்போனால் தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ், கப்திலை நிறுத்தும் வழிதெரியாது விழித்தார் என்றே கூற வேண்டும். 

கேன்வில்லியம்சுடன் (21) இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 72 ரன்களையும் டெய்லருடன் (66) இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 187 ரன்களையும் சேர்த்தார். டெய்லர் பெரும்பாலும் திணறினாலும் மிட்விக்கெட்டில் ஒரு மிகப்பெரிய சிக்சருடன் அரைசதம் கண்டார்.

தென் ஆப்பிரிக்கா அணி வேகப்பந்து வீச்சாளர்கள் மெதுவான பந்துகள், யார்க்கர்களை வீசமுடியவில்லை, மாறாக வேகமாக வீசியதால் கப்திலின் மட்டைச் சுழற்றலுக்குச் சிக்கினர். டுமினியின் 3 ஓவர்கள் 26 ரன்களுக்குச் சென்றது. பிரிடோரியஸ் 8 ஒவர்களில் 55 ரன்கள் கொடுத்தார். ரபாடா சிக்கனமாக வீசி 8 ஓவர்களில் 41 ரன்கள் விட்டுக் கொடுத்தார். பார்னெல் 7 ஓவர்களில் 44 ரன்கள். 

டிவில்லியர்ஸின் இறுதிகட்ட அதிரடி:

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி அதிர்ச்சிகரமாக குவிண்டன் டி காக் (0) விக்கெட்டை ஜீதன் படேலிடம் இழந்தது. முதல் ஓவரே ஜீதன் படேல் வீசினார், டி காக் விக்கெட் கீப்பர் ரோங்கியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஹஷிம் ஆம்லா தனது அபார பேட்டிங் மூலம் டிரெண்ட் போல்ட், சவுதியை அருமையாக ஆடி 38 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஜீதன் படேல் பந்தில் பவுல்டு ஆனார். 13-வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா 66/2 என்று இருந்த போது நியூசிலாந்து தென் ஆப்பிரிக்காவை நெருக்கியது. நீஷம், சவுதி கட்டர்களை இடையில் வீச தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகளை 30 ரன்களுக்கு இழந்தது. டுமினியின் திருப்தியற்ற தொடராக இது அமைய சவுதி பந்தில் 25 ரன்களுக்கு வெளியேறினார். டுபிளெசிஸ் தனது 67 ரன்களுக்கு 97 பந்துகளைச் சந்தித்தார். இவர் நீஷம் பந்தில் வெளியேறினார். டேவிட் மில்லர் டீப் மிட்விக்கெட்டில் அவுட் ஆனார். பிரிடோரியஸ் ரன் அவுட் ஆனார். 

அப்போது டிவில்லியர்ஸ் பின்கள வீரர்களைக் கொண்டு 158/6 என்ற நிலையிலிருந்து கட்டமைக்க வேண்டியிருந்தது. 12 ஓவர்கள் பவுண்டர்களே அடிக்க முடியாதக் கட்டத்தை டிவில்லியர்ஸ் கடந்து வந்து 37 பந்துகளில் 27 ரன்கள் என்று ஆடிவந்தார். பிறகு சாண்ட்னரை டீப் மிட்விக்கெட்டுக்கு மேல் சிக்ஸ் ஆடித்து தன் பாணிக்க்குத் திரும்பினார். கடைசி 8 ஓவர்களில் 100 ரன்கள் விளாசப்பட்டது. கிறிஸ் மோரிஸ், வெய்ன் பார்னெல் ஆகியோர் முறையே 28 மற்றும் 29 ரன்களைப் பங்களிப்புச் செய்ய டிவில்லியர்ஸ் 59 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 72 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். ரிவர்ஸ் ஷாட்களை இருமுறை திறமையாகப் பயன்படுத்தினார் டிவில்லியர்ஸ், அதுவும் போல்ட் வீசிய பந்து ஒன்றை ரிவர்ஸ் ஷாட்டில் பவுண்டரி அடித்தது அசத்தல். சவுதி, போல்ட் பின்னால் கொஞ்சம் ரன்களைக் கசியவிட்டனர். சாண்ட்னர் வழக்கம் போல் அருமையாக வீசி 40 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டையும் ஜீதன் படேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சவுதி, போல்ட் இருவரும் 70 ரன்களை விட்டுக் கொடுத்தனர். 

ஆட்ட நாயகனாக மார்டின் கப்தில் தேர்வு செய்யப்பட்டார்.

பிளஸ் 2 தேர்வு...தேர்வு மைய அலுவலர்களுக்கான அறிவுரைகள்

சென்னை: நாளை (02.03.2017) 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கவிருக்கவிருக்கிறது. இந்தப் பொதுத் தேர்வு நாளை தொடங்கி மார்ச் 31ம் தேதி வரை நடைபெறும். தமிழகம் முழுவதும் ஒன்பதரை லட்சம் மாணவ மாணவியர் தேர்வினை எழுத உள்ளார்கள். அதற்காக 2427 தேர்வு மையைங்கள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு மைய அலுவலர்கள் செய்ய வேண்டியவைகள்.
ஒவ்வொரு தேர்வுமையத்திற்கும் ஒரு தேர்வு துறை அலுவலர் நியமிக்கப்படுவார். தேர்வு நேர்மையாகவும். செம்மையாகவும் நடைபெற முதன்மைக் கண்காணிப்பாளருடன் சேர்ந்து செயல்படுவது இவரது முதன்மைப் பணியாகும் தேர்வு துறை அலுவலர் முதன்மைக் கண்காணிப்பாளருடன் மூன்று நாளைக்கு முன்னதாகவே தான் நியமிக்கப்பட்ட பள்ளி வளாகத்திற்குச் சென்று அங்குத் தேர்வு அறையினை ஆய்வு செய்ய வேண்டும். அதில் மாணவர்கள் உட்கார்ந்து தேர்வு எழுதுவதற்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளனவா, மற்றும் வினாத்தாள், விடைத்தாள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கு இரும்பு அலமாரிகள் உள்ளனவா, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உள்ளனவா என ஆய்வு செய்து அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை சரிசெய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
தேர்வு துறை அலுவலர் தேர்வு நாளன்று தேர்வு மையத்திற்கு வினாத்தாள்களை எடுத்து வரும் வழித்தட அலுவலர் வருவதற்கு முன்னதாகவே வந்து விட வேண்டும். இல்லையெனில் வழித்தட அலுவலர் தேர்வு துறை அலுவலர் வரும் வரைக்கும் காத்திருந்து பின்னர் அவரிடம் வினாத்தாள்களை ஒப்படைத்து விட்டு அடுத்த இடத்திற்குச் செல்லும் போது வழித்தட அலுவலர் தாமதமாக செல்ல வேண்டியது வரும். எனவே அதனைத் தவிர்க்கும் வகையில் தேர்வு துறை அலுவலர் தேர்வு நாளன்று தேர்வு மையத்திற்கு குறித்த நேரத்திற்கு முன்னதாகவே செல்ல வேண்டும்.
வினாத்தாள்களை வழித்தட அலுவலரிடமிருந்து பெற்றுக் கொண்ட தேர்வு துறை அலுவலர் முதன்மைக் கண்காணிப்பாளருடன் இணைந்து தேர்வு மையம், தேர்வு நாள், பாடம் ஆகிய அனைத்து தகவல்களையும் சரிப்பார்த்து விட்டு அதனை இருப்பு அலமாரியில் வைத்து அரக்கு முத்திரையிட வேண்டும்.
வினாத்தாளைப் பெற்றுக் கொண்டதற்கான அடையாளமாக தேர்வு துறை அலுவலர் பிறசேர்க்கை - 1ல் ஒப்புகைச் சீட்டில் கையொப்பம் இட வேண்டும்.
மேலும் தேர்வு துறை அலுவலர் தனது அலைபேசியை சுவிட்ச் ஆப் செய்து தேர்வுக்கட்டுப்பாட்டு அறையில் முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்வு முடிந்த பிறகுதான் அலைபேசியை உபயோகிக்க வேண்டும்.
முதன்மைக் கண்காணிப்பாளருடன் இணைந்து உரிய விடைத்தாள் உறைகளை அறைக் கண்காணிப்பாளர்களுக்கு வழங்க உதவி புரிய வேண்டும்.
9 மணிக்கு முன்னதாகவே அனைத்து வினாத்தாள்களையும் அந்தந்த அறைக்கண்காணிப்பாளர்களுக்கு முதன்மைக் கண்காணிப்பாளருடன் இணைந்து கொடுக்க வேண்டும் மீதமுள்ள வினாத்தாள்களை இரும்பு அலமாரியில் வைத்து அரக்கு முத்திரையிட வேண்டும்.
முதன்மைக் கண்காணிப்பாளருடன் நுழைவு வாயிலுக்குச் சென்று தேர்வு எழுதுபவர்கள் தவிர மற்ற யாரும் உள்ளே வராதவாறு கண்காணிக்க வேண்டும்.
தேர்வு ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தமக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு தேர்வு துறை அலுவலர் சென்று தேர்வுக்கு வருகை புரியாதோர் மற்றும் மொழிப் பாட விலக்கு அளிக்கப்பட்டோரின் வினாத்தாள் விடைத்தாள்களைப் பெற்று தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு சென்று இரும்பு அலமாரியில் வைத்து பூட்டி சீல் வைக்க வேண்டும்.முதன்மைக் கண்காணிப்பாளர் / துறை அலுவலர் அரக்கு முத்திரையிட்ட விடைத்தாள் கட்டுக்கள் கொண்ட துணி உறையின் மீது கையொப்பமிட்டு அவரவர் பள்ளி முத்திரையையும் இட வேண்டும். தேர்வு முடிந்த பின்பு மாணவர்களை அமைதியாக அறையை விட்டு வெறியேறச் செய்ய வேண்டும். கூடுதல் நேரம் சலுகைப் பெற்று தேர்வு எழுதுபவர்கள் தேர்வினை முடிக்கும் வரை அறைக்கண்காணிப்பாளர் அறையில் இருக்க வேண்டும். பின்பு தேர்வு துறை அலுவலர் அறைக் கண்காணிப்பாளருடன் விடைத்தாள்களை எடுத்துக் கொண்டு கட்டுக் காப்பு அறைக்கு திரும்ப வேண்டும். அறைக்கண்காணிப்பாளர் தேர்விற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கையும் விடைத்தாள்களின் எண்ணிக்கையும் சமமாக உள்ளதா என சரிப்பார்த்து முதன்மைக் கண்காணிப்பாளரிடம் அதனை ஒப்படைக்க வேண்டும். முதன்மைக் கண்காணிப்பாளருடன் இணைந்து மொழி/பாடம்/பயிற்று மொழி வாரியாக தனித்தனியாக விடைத்தாள் கட்டுகளை துணி உறையில் வைத்து தைத்து அரக்கு முத்திரையிட்டு அதன் மீது பிறசோர்க்கை 3ல் உள்ளவாறு உரிய விபரங்களை எழுதி அதில் கையொப்பம் இட வேண்டும். அரக்கு முத்திரையிடப்பட்ட விடைத்தாள்களை முதன்கைக் கண்காணிப்பாளருடன் இணைந்து வழித்தட அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்வு தொடங்குவதில் இருந்து முடியும் வரை துறை அலுவலர் முதன்மைக் கண்காணிப்பாளருடன் இணைந்து செயல்பட வேண்டும்.