Wednesday, January 3, 2018

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 16ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு


மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது  ஆட்சியர் தலைமையிலான இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர், எஸ்.பி. ஆகியோர் பங்கேற்றனர் . பாலமேடு, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர்  உள்ளிட்ட ஜல்லிக்கட்டு கமிட்டியினரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதிகளை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்,  அதன்படி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 14ல் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. மேலும் பாலமேட்டில் ஜனவரி 15ல் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் அலங்காநல்லூரில் 16ல் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடைபெறும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 3மணி வரை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை பரிசோதனை செய்ய 6 மருத்துவர்களை கொண்ட 10 மருத்துவக்குழு அமைக்கப்படும் என்றும் மாடுபிடி வீரர்களை பரிசோதிக்கவும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் 4 அடி உயரமும், 3 வயது நிரம்பியதாகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 


7மணி நேரம் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் சுழற்சி முறையில் அனுமதி தரப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சிறப்பாக விளையாடும் வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுகளில் மாடுபிடிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவித்துள்ளார். பாதுகாப்பு பணிக்காக சுமார் 10 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 3 தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் இருக்கும் என அறிவித்துள்ளார். அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment