தமிழகத்தின் புதிய தலைமைச் செயலகமாக போயஸ் தோட்டத்தை மாற்றிவிடக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும், ரகசியக் காப்பு உறுதிமொழியை மதித்து நிர்வாக அமைப்புக்கு அப்பால் உள்ளவர்களிடம் அரசு நிர்வாகம் குறித்து ஆலோசனை நடத்துவதையும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தவிர்க்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், இனியாவது அரசு நிர்வாகம் மக்களுக்கு பயனுள்ள வகையில் செயல்பட வேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் ஏற்பட்டது. ஆனால், புதிய அதிமுக அரசின் செயல்பாடுகள் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையிலான நல்ல தொடக்கமாக அமையவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
ஒவ்வொரு நாளும் தலைமைச் செயலகத்துக்கு சென்று நிர்வாகப்பணிகளை கவனிப்பதற்கு முன்பாக போயஸ் தோட்டத்துக்கு சென்று வருகையை பதிவு செய்வதில் தான் முதல்வர் பன்னீர் செல்வம் ஆர்வம் காட்டுகிறார்.
கடந்த வியாழக்கிழமை காலை போயஸ் தோட்டத்துக்கு சென்ற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி ஆகியோர் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து நேற்றும் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, செல்லூர் ராஜு, காமராஜ், விஜயபாஸ்கர், பெஞ்சமின் ஆகியோர் தனித்தனி குழுக்களாக போயஸ் தோட்டத்திற்கு சென்று சசிகலாவை சந்தித்து பேசியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
முதல்வரும், அமைச்சர்களும் தலைமைச் செயலகம் சென்று பணிகளை கவனிப்பதற்கு முன்பாக, எந்த அரசு பதவியிலும், அரசியலமைப்புச் சட்ட பொறுப்பிலும் இல்லாத தனிநபரான சசிகலாவை சந்தித்து பேசுவது எந்த வகையில் சரி? என்பது தெரியவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த பிரிவு இதை அனுமதிக்கிறது என்பதும் புரியவில்லை.
முதல்வரும், மற்ற அமைச்சர்களும் சசிகலாவை அரசு நிர்வாகம் குறித்து விவாதிப்பதற்காக சந்திக்கவில்லை என்றும், உட்கட்சி விவகாரங்கள் குறித்து பேசுவதற்குத் தான் சந்தித்தனர் என்றும் அதிமுக சார்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்படலாம். அதிமுகவைப் பொறுத்தவரை சசிகலா என்பவர் 77 செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே.
ஆனாலும், உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாக விவாதிப்பதற்காக அவரை முதல்வரும், அமைச்சர்களும் சந்தித்திருந்தால் அது உட்கட்சி விஷயம் என்பதால், அது குறித்து வினா எழுப்புவது நாகரீகமான செயலாக இருக்காது. ஆனால், ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் இந்த சந்திப்பு குறித்து அப்படி குறிப்பிடவில்லை.
மாறாக, 8-ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனையில் முதல்வரும், மற்ற அமைச்சர்களும் கடந்த காலங்களில் எவ்வாறு செயல்பட்டார்களோ, அதேபோல் இனியும் செயல்பட வேண்டும் என்று சசிகலா அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. 9-ஆம் தேதி நடந்த ஆலோசனையின் போது, தமிழக அரசின் சார்பில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கியதாகவும், அதன்படி தான் இன்று காலை 11.30 மணிக்கு அமைச்சரவையை பன்னீர்செல்வம் கூட்டியதாகவும் கூறப்படுகிறது.
முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்; அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின்படிதான் செயல்பட வேண்டும். மாறாக, அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்; எப்போது அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்றெல்லாம் அறிவுரை வழங்க சசிகலாவுக்கு அதிகாரமில்லை. அவ்வாறு ஆலோசனை வழங்கியிருந்தால் அது அரசின் செயல்பாடுகளில் தலையிடும் செயலாகும். இத்தகைய செயல்களை ஆட்சியாளர்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
தமிழக அமைச்சர்கள் மட்டுமின்றி, சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் ஜார்ஜும் சசிகலாவை நேற்று சந்தித்து பேசியுள்ளார். அரசுத்துறை செயலாளர்கள் பலரும் நேற்று சசிகலாவை சந்தித்ததாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் தான் கட்சி விவகாரங்கள் குறித்து விவாதிக்க சசிகலாவை சந்தித்தனர் என்றால், காவல்துறை ஆணையரும், அரசுத்துறை செயலாளர்களும் சசிகலாவை எதற்காக சந்திக்க வேண்டும்.
அரசியலமைப்புச் சட்ட பதவி எதிலும் இல்லாத சசிகலாவை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சந்தித்தால் அது மிகவும் மோசமான நிர்வாக சீர்குலைவுகளை ஏற்படுத்திவிடும். சசிகலாவும், அவருக்கு நெருக்கமானவர்களும்தான் அமைச்சர்களை வழிநடத்துகின்றனர் என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டு விட்டால், சசிகலாவும் அவரது உறவினர்களும் அரசு நிர்வாகத்தில் புகுந்து ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகிவிடும். இது ஜனநாயகத்திற்கு எந்தவகையிலும் நல்லதல்ல.
எனவே, பதவியேற்பின்போது ஏற்றுக்கொண்ட ரகசியக் காப்பு உறுதிமொழியை மதித்து, அரசு நிர்வாகம் தொடர்பாக தெரியவரும் எந்த தகவலையும் மற்றவர்களிடம் தெரிவிப்பதையும், நிர்வாக அமைப்புக்கு அப்பால் உள்ளவர்களிடம் அரசு நிர்வாகம் குறித்து ஆலோசனை நடத்துவதையும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தவிர்க்க வேண்டும்.
அரசியல் சட்டத்தை மதித்து, அதன் வழிகாட்டுதல்படி மட்டும் ஆட்சி செய்ய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்வர வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் அரசியலமைப்பு சட்டம் மற்றும் நீதித்துறை உதவியுடன் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை ஆட்சியாளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment