திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்த தகவல்களை ஒளிவு மறைவின்றி தெரிவிப்போம் என்று திமுக மூத்த தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக தகருணாநிதி 15-ம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக காவிரி மருத்துவமனை 'கருணாநிதிக்கு தற்போது டிரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய் எதிர்ப்புக்கான ஆன்டிபயாடிக் மருந்துகளும் வழங்கப்படுகின்றன. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவருக்கு பிரத்யேக மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகிறது' என செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திமுக மூத்த தலைவர் துரைமுருகன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், விசிக தலைவர் திருமாவளவன், உள்ளிட்டோர் காவிரி மருத்துவமனைக்கு நேரில் வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள், உறவினர்களிடம் கேட்டறிந்தனர்.
மருத்துவமனையில் இருந்து திரும்பிய துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''சளித் தொந்தரவு காரணமாகவே கருணாநிதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நன்றாகவே உள்ளது. அவரது உடல்நலம் குறித்து தகவல்களை ஒளிவு மறைவின்றி தெரிவிப்போம்.
வரும் 20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள திமுக பொதுக்குழுவை தள்ளிவைப்பது குறித்து பரிசீலிப்போம்'' என்றார்.
No comments:
Post a Comment